Saturday, March 24, 2018

மழை

அவளை நான் சந்தித்ததில்லை
நிழற்படம் மட்டுமே
பல நாட்கள் சென்றன பேசாமல்
வற்புறுத்த விருப்பமில்லை
இன்றவளே விசாரிக்கத் தொடர்பு கொண்டாள் குறுஞ்செய்தியில்
உள்ளுக்குள் ஒருவித மகிழ்ச்சி
அது மகிழ்ச்சிதானா தெரியவில்லை
விசாரித்துக் கொண்டோம்
அவள் குரல் கேட்க ஆசைதான்
கூறிவிட முடியவில்லை
தயக்கங்கள் ஒரு புறமிருக்க
சொல்லிவிட்டேன் அவளை நான்
இழந்திருப்பதை
சில நொடிகள் அமைதி
'ம்ம்ம்' என்றவள் பின் அழைத்தாள்
அது வெறும் குரலல்ல
பெண்மையின் வடிவம்
நான் முழுமையாக நனைந்தேன்

மழை

-ராகவேந்திரன்

Wednesday, March 21, 2018

கடல்

பார்த்து பார்த்து ஏக்கம் படர்ந்து
வாடிய பூக்களாய் பார்வை வருந்திட
மின்மினி போல் இமைக்கும் நொடியில்
கடைவிழி பார்வை அவள் வீசிட
மின்னலாய் வந்த விண்மீன் கூட்டம்
அவன் பார்வையில் இடியாய் முழங்கிட
உயிரூட்டிய ஆசை வலைதனை
வீசினான் அவளின் ஆழத்தில் முத்தெடுக்க!

கடல்

-ராகவேந்திரன்

Saturday, February 17, 2018

மயக்கமென்ன?

அந்த தேனீர் நேரம்
சிவந்த வானில் மஞ்சள் நிலவாக
வரிசையில் அவள்
அவனோ பின் நிற்க
அங்கும் இங்கும் அவள் பார்க்க
அந்த பிழையில்லா இதழ்கள்
பிரம்மன் வடித்த பூவிதழ் அது
அவன் கண்களை துளைத்து
நினைவினை விழுங்க
உயிருற்ற சிலையானான்
வாசம் கண்டவள்
சில்லென்ற தூறல் பட்டவளாய்
தன்னுள்ளே மலர்கின்றாள்!

மயக்கமென்ன?

இரா^2